தமிழ்நாடு
ஒவ்வொரு மாதமும் குடும்பத்தலைவிகளும் அக்கவுண்டில் ரூ.1500: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சியான அதிமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று ஒவ்வொரு மாதமும் குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1500 கொடுக்கப்படும் என்பது தான்.
இந்த கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளின் ஒட்டுமொத்த வாக்குகளையும் கவரலாம் என்பதே அதிமுகவினர்களின் திட்டம். ஏற்கனவே கமல்ஹாசன் தனது தேர்தல் பிரசாரத்தின்போது குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பணம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் ரூபாய் 1000 ஒவ்வொரு மாதமும் குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான திண்டுக்கல் சீனிவாசன் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது ’வீட்டில் உள்ள தாய்மார்கள் தங்களுடைய கணவர்கள் வெளியூர் போய் இருந்தால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு வீட்டுச்செலவுக்கு ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி ரூபாய் ஆயிரத்தி ஐநூறு உங்கள் அக்கவுண்டில் வந்து விடும் என்று கூறினார்.
அதுமட்டுமின்றி கல்விக்காக வாங்கிய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் குடும்ப பெண்களை கவர்ந்துள்ள நிலையில் குடும்ப பெண்களின் வாக்குகளால் அதிமுக வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


















