சினிமா
தர்பார் விமர்சனம்… மற்றொரு அட்டகாசமான ரஜினி படம்…

மும்பையில் காவல் ஆணையர் ஆதித்ய அருணாச்சலம் (ரஜினி) கண்ணில் படும் ரவுடிகளை எல்லாம் என்கவுண்டர் செய்கிறார். அதை விசாரிக்க வரும் மனித உரிமைகள் கழகத்தினரையும் (ஆணையம் இல்லை கழகம். அப்படித்தான் தலைவர் சொன்னார்) மிரட்டி கையெழுத்து வாங்கி அனுப்பிவிடுகிறார் ஆதித்ய அருணாச்சலம். ஆனால், உண்மையில் இவ்வளவு மூர்க்கமான ஆள் இல்லை ஆதித்ய அருணாச்சலம். அப்படியானால் இவ்வளவு மூர்க்கமாக ஆதித்ய அருணாச்சலம் நடந்துகொள்வதற்கான காரணம் என்ன? என்பதை சுருள் சுருளான கம்பிவளைவுகளுக்குப் பின்னான பிளாஸ்பேக் மூலம் சொல்லும் படம் தான் தர்பார்…
ஆதித்ய அருணாச்சலமாக அவ்வளவு அழகாக சுருசுருப்பாக இருக்கிறார் ரஜினி… இப்போதும் சொல்லலாம்… வயசானாலும் உன் அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை என்பதை. ஏனென்றால் இதெல்லாம் அவர் கூடவே பிறந்தவை இல்லையா? நகைச்சுவை, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அதகளம் செய்திருக்கிறார் ரஜினி. அவ்ளோ இளமை… அவ்ளோ வேகம்… இப்போதும் ரஜினியின் கண்கள் நடிக்கின்றன. ஸ்கிரீனில் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளார் ரஜினி. பாடல் காட்சிகளில் இவரின் எனர்ஜி வேற லெவல். நயன் தாராவிடம் காதலை சொல்லும் காட்சிகளில் அண்ணாமலை ரஜினியை பார்க்கலாம். அவ்ளோ அப்பாவியாக காதலை வெளிப்படுத்துகிறார். ரஜினியை மட்டுமே பேசிக்கொண்டே போகலாம். பார்த்துக்கொண்டே இருக்கலாம். தர்பாரிலும் அவரின் மேஜிக் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இனியும் ஆகும்…
ரஜினி தவிர்த்து தர்பாரில் கவனிக்க வைப்பவர்கள் நிவேதா மற்றும் யோகி பாபு. ரஜினி படங்களில் வரும் தங்கைகள் போல இப்போது மகள்கள். வருகிறார்கள் பாசம் பொங்குகிறார்கள் இடையில் இறந்து போகிறார்கள். அதையே இம்மி பிசகாமல் செய்திருக்கிறார் நிவேதா.
யோகி பாபுவின் ஒன் லைன் கவுண்டர்கள் செம்மையாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. எல்லா இடத்திலும் ரசிக்கும் படியாக இருக்கின்றன. ரஜினியை கலாய்க்கும் இடங்களில் அவ்ளோ அழகாக கவுண்டர் கொடுத்திருக்கிறார். மிக முக்கியக் காரணம் இதற்கெல்லாம் சூப்பர் ஸ்டார் அனுமதி கொடுத்தது தான். இதெல்லாம் மற்ற எந்த பெரிய நடிகருக்கும் வராத ஒரு பெரிய குணம். ரஜினி ஏன் சூப்பர் ஸ்டார் என்பதற்கு யோகி பாபுவுக்கு சினிமாவில் கொடுத்துள்ள ஸ்பேஸ் சொல்லும். யோகி பாபுவும் அடக்கி அதே நேரம் ரசிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.
தர்பார் முழுவதும் வில்லன்கள் தான். தாடி வைத்து வந்து ரஜினியின் குண்டடிபட்டு செத்துக்கொண்டே இருக்கிறார்கள். சுனில் ஷெட்டி தான் முக்கியமான வில்லன் என்றாலும் அவர் இடைவேளைக்குப் பின்னர்தான் வருகிறார். முருகதாஸ் படங்களில் வில்லன்களுக்கு ஆரம்பத்தில் இருந்து ஒரு பில்டப் கொடுத்து எப்படா வில்லனுடன் கதாநாயகன் மோதுவான் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பார். இதிலும் பில்டப் கொடுத்துள்ளார். ஆனால், அது கொஞ்சம் ஓவர் டோஸாக அமைந்துள்ளது. பெரிய அளவில் வில்லனுக்கான கதாபாத்திரம் வெயிட் இல்லை.
மற்றபடி ஓ… நயன்தாரா… மன்னிச்சுடுங்க… நாலே நாலு காட்சியில் மட்டுமே வருகிறார். அதில் இரண்டு பாடல்காட்சி. ரஜினி படத்தில் வலுவாக இருக்கும் வில்லனே இதில் கொஞ்சம் வலு இல்லாமல் இருக்கும் போது சும்மா கடமைக்காக வைக்கப்பட்டுள்ள போது கதாநாயகிக்கு மட்டும் என்ன பெரிய இடம் இருக்கப் போகிறது. நயன்தாரா மற்றொரு ரஜினி பட நாயகி அவ்ளோ தான் படத்தில் அவருக்கான இடம்.

தர்பார் ரஜினிகாந்த் போஸ்ட்டர்
போலீஸ் கதை… அதை ரஜினிக்கு ஏற்ற மாதிரி… ரஜினி ரசிகர்களுக்குப் பிடிக்கும் மாதிரி… ரஜினி படமாக எடுத்திருக்கிறார் ரஜினி. சார் இதுதான் காட்சி… ஸ்டைலா கெத்தா நடிங்க சார் என சொல்லிவிட்டு உட்கார்ந்துவிட்டார் போல முருகதாஸ்… மற்றபடி மும்பை தாதாக்களை அழிக்கும் ஒரு போலீஸ் கதை தான் இது. ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். தளபதியில் காட்டியதை விட ரஜினியை அழகாக காட்டியுள்ளார். மற்றபடி இந்தப் படத்திற்கு சந்தோஷ் சிவனின் தேவை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இசை அனிருத்… ரஜினிக்கான பின்னணி இசை நன்றாக இருக்கிறது. பாடல்கள் முன்னரே பிரபலம் ஆகிவிட்டன. ஆனால், இரண்டாம் பாதியில் காதை கொஞ்சம் பதம் பார்த்துவிட்டுத்தான் அனுப்புகிறார்.

தர்பார் ரஜினிகாந்த்
முற்பாதி அட்டகாசமாக இருக்கிறது. இரண்டாம் பாதியும் சூப்பர் ரகம் தான். ஆனால், கொஞ்சம் இழுவை. அவ்ளோ பில்டப் கொடுத்த வில்லன் ரெண்டே அடியில் செத்துப்போவது. ரஜினி சுட்டுக்கொண்டே இருப்பது. மகள், யோகி பாபு, நயன்தாரா என எப்போது ரஜினியுடனேயே இருப்பது. எல்லா இடங்களுக்கும் எம்பசி, மினிஸ்டரி என எந்த இடமாக இருந்தாலும் அசால்டாக சென்று வருவது என இன்னும் எவ்ளோ இதில் குறை கண்டுபிடிக்க வாய்ப்பு இருந்தாலும் ரஜினி என்ற ஒற்றை ஆள் படத்தை ரசிக்க வைத்துவிடுகிறார். அதனால் தான் இன்னும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் ரஜினி.
ரஜினிக்கு வயது எழுபது… கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக திரையில் வந்தாலே வசீகரிக்கும் பெயர் ஆளுமை ரஜினி. தர்பாரிலும் அப்படியே செய்திருக்கிறார். ரஜினி ஒரு சினிமாவை பொழுதுபோக்காக மட்டுமே பார்ப்பவர். இதுவும் ஒரு நல்ல ரஜினியின் பொழுதுபோக்கு படம்…