சினிமா
இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு விமர்சனம்… கொஞ்சம் சத்தமாக வெடித்திருக்க வேண்டும்…

இரண்டாம் உலகப் போரின்போது மும்பை வரும் சரக்கு கப்பல் நடுக்கடலில் விபத்துக்குள்ளாகிறது. அப்போது அதில் இருந்த பயணிகள் உட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குண்டுகள் கடலில் மூழ்கிவிடுகின்றன. அப்படியான குண்டுகளை அப்புறப்படுத்துவதாக இந்திய நிறுவனமும் அமெரிக்க நிறுவனமும் 2000 கோடியை ஊழல் செய்து அவற்றை நடுக்கடலில் கொட்டி விடுகின்றனர் அந்தக் குண்டுகள் அவ்வப்போது அலைகளால் அடித்து வரப்பட்டு வெடிக்கின்றன. சில குண்டுகளை மக்கள் கப்பலின் பாகங்கள் என நினைத்தும் இரும்பு என நினைத்தும் உடைக்கும்போது அவை வெடித்து விபத்து நடக்கின்றன. அப்படி நடக்கும் விபத்தில் 10 கி.மீ. தூரமும் 2000க்கும் மேற்பட்ட. மக்களும் இறக்கின்றனர். அப்படி ஒரு குண்டு மாமல்லபுரம் கடற்கரையில் ஒதுங்குகிறது. அதை இரண்டு கூட்டம் தேடுகிறது. குண்டு வெடித்ததா இல்லையா என்பதை தியேட்டரில் பார்த்துக்கொள்ளலாம்.
நல்ல கதை, நல்ல நடிகர்கள் இருந்தும் சில நேரம் சுவாரஸ்யம் இல்லாத அல்லது திசை மாறும் திரைக்கதைகளால் சில படங்கள் கொஞ்சம் மோசமாகிவிடும் வாய்ப்பு உருவாகும். அப்படியான ஒரு படம்தான் இந்த படம்.
குண்டை கைப்பற்றி ஊழலை மறைக்க நினைக்கும் ஒரு கும்பல்… குண்டை கண்டுபிடித்து ஊழலை வெளிக்கொண்டுவரும் ஒரு கும்பல்… இவர்கள் இருவருக்குள்ளும் மாட்டிக்கொண்ட நாயகன்… என்ன எப்படி என ஒரு நல்ல சேஜிங் படமாக உருவாகியிருக்க வேண்டியது…
காய்லாங்கடை தொழில்… அங்கு நடக்கும் உழைப்பு சுரண்டல்… அந்த மக்களின் வாழ்க்கை… அவற்றுக்குள் கதாநாயகனின் செயல்கள் என இப்படி யாருமே தொடாமல் விட்டிருந்த புத்தம் புதிய கதைக்களம்… சொல்ல எவ்வளவோ சொல்லியிருக்க வேண்டிய படம்…
இடைநிலை சாதி பெண்ணை காதலிக்கும் தலித் இளைஞர்… அதில் நடக்கும் சிக்கல்… அந்த கிராம மக்களின் வாழ்வியல்… அதில் உள்ள கூத்து கலை… பண்பாடு… என உருவாகியிருக்க வேண்டிய படம்… இது புதிய கதை இல்லைதான் என்றாலும் விழுப்புரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளை மையமிட்டு அங்குள்ள சாதிய அரசியலை பேசி ஒரு படம் வரவே இல்லை. அதனால் இதுவும் நிச்சயம் புதிய களமாக அமைந்திருக்கும்… அமைந்திருக்க வேண்டிய படம்…
ஆனால், இத்தனை விஷயங்கள் இருந்தும் இந்தப் படம் சருக்கும் இடம் இவை மூன்றையும் ஒரே கதைக் களத்துக்குள் கொண்டுவந்து ஒன்றையும் தெளிவாகச் சொல்லாமல் செல்வதுதான்.
படம் ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே அட ஒரு அருமையான படத்துக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்திய இயக்குநர் அடுத்தடுத்து பெரிய ஏமாற்றங்களை கொடுக்கிறார்.
ரஞ்சித் தன்னுடைய அத்தனை நடிகர்களையும் இதிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள்… அட்டக்கத்தி தினேஷ் லாடி ஓட்டுநராக பாடி லாங்குவேஜ், பேச்சு, லுக் என என அட்டகாசமாக பொருந்தியிருக்கிறார்… கயல் ஆனந்தி, ரக்ஷிதா, ராமதாஸ் @ முனீஷ்காந்த்… இவர்கள் நான்கு பேரும் கதையில் முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளனர். மற்றவர்கள் எல்லோரும் வருகிறார்கள்… போகிறார்கள்…
இசை தென்மா… முதலில் குண்டுக்கு போடும் பின்னணி, இறுதியில் வரும் ஒரு பாடலுக்கான கிராமிய இசை தவிர மற்ற இடங்களில் பெரிதாக ஒட்டவில்லை… இன்னும் தனியிசையில் மட்டுமின்றி திரையிசையிலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறோம்…
அதிரன் ஆதிரை… கதை தேர்வு, பாத்திரங்கள் தேர்விலும், சில காட்சிகளிலும் முத்திரை பதிக்கிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் நிச்சயம் ஒரு சிறப்பான திரைக்கதையுடன் ஒரு அட்டகாசமான கதையை எதிர்பார்க்கலாம். என்ற நம்பிக்கை இருக்கிறது… காத்திருக்கிறோம்…
ரஞ்சித் பட்டறையில் இருந்து சமூக அரசியல் சினிமாக்கள் தொடந்து வருகின்றன. தேவையும் கூட. ஆனால், அவை கதையாகவும், திரையாகவும் முழுமை பெற்றால் தான் அந்தப் பட்டறையின் நோக்கம் முழுமை பெறும். அல்லது இந்த வசனங்களையும் கருத்துகளையும் தமிழகத்தில் எளிதில் கடந்து செல்லப்படும்… அப்படித்தான் பல முக்கியமான வசனங்கள் தேவையே இல்லாமல் வருகின்றன. கடந்து செல்லப்படுகின்றன…
இது நம்மைவிட அவர்களுக்கு நன்றாகவே தெரியும். விரைவில் அப்படியான ஒரு படத்தை எதிர்பார்ப்போம்… குண்டு பெயரில் உள்ள பிரமிப்பு படத்தில் இல்லாதது ஒரு பெரிய ஏமாற்றமே…