தமிழ்நாடு
அதிமுக உட்கட்சி பூசல், ராஜன் செல்லப்பா போர்க்கொடி: முதல்வர் பதில் பேட்டி!

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுக ஒரே தலைமையின் கீழ் செயல்பட வேண்டும். மீண்டும் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றார். இதனை பொதுக்குழுவில் சொல்ல உள்ளதாக கூறிய ராஜன் செல்லப்பா இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 9 எம்எல்ஏக்கள் ஏன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லவில்லை? அவர்களை தடுத்தது யார்? என கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் ராஜன் செல்லப்பாவின் இந்த திடீர் போர்க்கொடி குறித்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், நான் இன்னும் அந்த பேட்டியைப் பார்க்கவில்லை. அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை கேட்ட பிறகுதான் அதுகுறித்து பதில் சொல்ல முடியும்.
இது கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சினை. அதிமுகவில் கோஷ்டி பூசல் இருப்பதாகக் கூறுவது தவறான தகவல். எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும்தான் இவ்வாறு கூறுகிறீர்கள். அதிமுக பலம் பொருந்திய கட்சியாக உள்ளது. அதனால்தான் 9 எம்எல்ஏக்கள் வெற்றிபெற்றனர். அமமுகவினரும் அதிமுகவுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.
9 எம்எல்ஏக்கள் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்லவில்லை என்று கூறுவது தவறான கருத்து. பல சட்டமன்ற உறுப்பினர்கள் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்திருக்கிறார்கள்.ஜெயலலிதா நினைவிட கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதால் யாரும் அங்கு செல்லவில்லை என்றார்.





















