தமிழ்நாடு
சுட்டு தள்ளுங்க பாஜக பார்த்து கொள்ளும்; அண்ணாமலை எல்லை மீறிய பேச்சு: திருமாவளவன் கடும் கண்டனம்!

ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார், சுட்டு தள்ளுங்க, பாரதிய ஜனதா பார்த்துக்கொள்ளும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்து அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்.

#image_title
சமீபத்தில் ராணுவ வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து போராட்டம் ஒன்றை நடத்தியது தமிழக பாஜக. இந்த போராட்டத்தில் பேசிய அண்ணாமலையின் பேச்சின் ஒரு பகுதி மட்டும் தற்போது பரவி வருகிறது. அதில், உங்களுடைய கைகளில் துப்பாக்கி இருக்கிறது. துப்பாக்கிக்குள் குண்டு இருக்கிறது. ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். நீங்கள் சுட்டு தள்ளிகிட்டு வந்துகிட்டே இருங்க. மிச்சத்தை பாரதிய ஜனதா பார்த்து கொள்ளும் என அண்ணாமலை பேசுவதாக அந்த வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது. இது முழுமையான பேச்சு இல்லை. அவரது பேச்சின் ஒரு பகுதியே ஆகும். இந்த பேச்சு தான் தற்போது அதிகமாக பரவி சர்ச்சையாகியுள்ளது.
அண்ணாமலையின் இந்த பேச்சை கண்டித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள் என ஒருவர் பேசுவதை அசட்டுத் துணிச்சல் என்பதா? முதிர்ச்சியில்லா அரைவேக்காட்டுத்தனம் என்பதா? திட்டமிட்டே வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் கும்பலின் கலாச்சாரம் என்பதா? எதுவாயினும் இது தலைமைப் பண்புக்குரியதாகுமா?
மோடியும் என்னைப்போன்ற ஒரு பொறுப்பற்ற நபர்தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா? இவர்மீது வழக்குப்பதிந்து கைது செய்திருக்க வேண்டாமா? தில்லியை ஆளும் கட்சிக்கு மாநிலக் கிளைத்தலைவர் என்றால் அவர்மீது சட்டம் பாயாதா? தமிழ்நாடு அரசு அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் என பதிவிட்டுள்ளார் அவர்.