தமிழ்நாடு
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கு மக்களிடையே விழிப்புணர்வு!

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை பள்ளி கல்வித் துறையின் கீழ் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக, வகுப்பறை கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும் எழுத்தும் என்ற இயக்கம் தொடங்கப்பட்டு, 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் அனைத்து மாணவர்களின் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவு திறன்களை மேம்படுத்துகிறது.
மாணவர் சேர்க்கை கொண்டாட்டம்
தமிழக ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்கே “மாணவர் சேர்க்கை கொண்டாட்டம்” மற்றும் “விழிப்புணர்வு பரப்புரை” வாகனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக, விழிப்புணர்வு பரப்புரை வாகனம், கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி திருவள்ளூர் லட்சுமிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து 3 விழிப்புணர்வு பரப்புரை வாகனங்களை திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் பாலமுருகன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் கற்பகம் மற்றும் மோகனா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சித்ரா, வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வர்கள் கலந்து கொண்டனர்.