சினிமா செய்திகள்
உலகளவில் புதிய வசூல் உச்சத்தை தொட்ட அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!

மார்வெல் தயாரிப்பில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் 3 நாள் முடிவில் உலகளவில் புதிய வசூல் உச்சத்தை தொட்டுள்ளது.
ருசோ சகோதரர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரையிட்ட இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மார்வெல் திரையுலகின் அத்தனை சூப்பர் ஹீரோக்களும் ஒன்று திரண்டு தானோஸை அழிக்கும் காட்சி தியேட்டர்களில் அதகளம் செய்துள்ளது. அதிலும், டோனி ஸ்டார்க் இன்பினிட்டி கற்களை கடைசியில் சொடுக்கி தானோஸ் கூட்டத்தை அழித்து விட்டு உயிர் துறந்துவிடும் வேளையில், திரையரங்கமே மெளன அஞ்சலி செலுத்துகிறது.
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் கடந்த வியாழனன்று சீனா மற்றும் அமெரிக்காவில் வெளியானது. வெள்ளியன்று உலகமுழுவதும் ரிலீசானது. வியாழன் முதல் சனி வரையிலான 4 நாட்கள் வசூலாக உலகமுழுவதும் இந்த படம் 4 ஆயிரத்து 749 கோடி ரூபாய் வசூலை ஈட்டி புதிய சாதனையை படைத்துள்ளது.
இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 63 கோடி ரூபாயும், தமிழ்நாட்டில் 5 கோடி ரூபாயும், சென்னையில் மட்டும் முதல் நாளில் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயையும் வசூல் ஈட்டியுள்ளது. இது பேட்ட, விஸ்வாசத்தின் முதல் நாள் வசூலை விட அதிகமாகும்.
முதல் வார இறுதிக்குள் படத்தின் வசூல் 6 ஆயிரம் கோடியை தாண்டும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.



















