செய்திகள்
மே 4 முதல் தொடங்கும் அக்னி நட்சத்திரம்: வெயிலின் தாக்கம் எவ்வாறு இருக்கும்? வானிலை அறிக்கையால் வெளியான முக்கிய தகவல்!

சென்னை:
வருடம் தோறும் பெரும் வெப்பத்துடன் பயமுறுத்தும் அக்னி நட்சத்திர காலம் இந்தாண்டு மே 4ஆம் தேதி தொடங்குகிறது. இது மே 28ஆம் தேதி வரை மொத்தம் 25 நாட்கள் நீடிக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவிக்கிறது.
இக்காலத்தில், இயல்பை விட வெப்பம் அதிகரித்து மக்கள் வாழ்க்கையை சீர்குலைக்கும் அளவுக்கு இருக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ் ஐ கடந்துவிடும் என்ற கணிப்பும் உள்ளது. ஆனால், இதற்கு இடையே சில இடங்களில் வெப்ப சலனத்தால் குறுகிய அளவில் கோடை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இது வெயிலை சற்று குறைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டில் கரூர் பகுதியில் 111 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி, கடந்த ஆண்டின் உச்ச வெப்பமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அந்த அளவுக்கு வெப்பம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. இதற்கான முக்கிய காரணம், லா-நினோ மற்றும் இந்தியப் பெருங்கடல் வெப்பமடைவுப் போக்கு (I.O.D) சமநிலையில் இருப்பதுதான் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வீடுகளில் மின் விசிறி தடைப்பட்டாலும் கூட உடனே வியர்த்து போய் விடும் சூழ்நிலையை மக்கள் தற்போது அனுபவிக்க ஆரம்பித்துவிட்டனர். இதனைக் கருத்தில் கொண்டு, மக்கள் தங்களை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.









