தமிழ்நாடு
பேருந்து நடத்துனர்களை அடித்து உதையுங்கள்: அமைச்சர் துரைமுருகனின் ஆவேச பேச்சு!

பேருந்து நடத்துநர்கள் பெண்களை தரக்குறைவாக நடத்தினால் அவர்களை அடித்து உதையுங்கள் என்றும் அவர்களை என்னிடம் யார் என்று கூறினால் அவர்களை வேலையை விட்டு தூக்குவேன் என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக அமைச்சர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர் பேசியபோது, ‘அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் என்று அறிவித்து இருக்கின்றோம் ஆனால் சில நடத்துனர்கள் பேருந்து அவன் அப்பன் வீட்டு சொத்து போல பெண்களை நடத்துகின்றனர். அவ்வாறு பெண்களை தரக்குறைவாக நடத்தினால் அவர்களை அடியுங்கள் என்றும், அல்லது எனக்கு தெரிவியுங்கள் நானே அவர்களை வேலையை விட்டு தூக்கி வீட்டுக்கு அனுப்புவேன் என்று தெரிவித்தார்.
இது நடத்துநர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேருந்து நடத்துநர்கள் பெண்களிடம் தரக்குறைவாக நடந்தால் அது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறாமல், அமைச்சர் ஒருவரே அடித்து உதையுங்கள் என கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மத்தியில் எந்தவிதமான ரியாக்ஷனும் ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஏற்கனவே நேற்று வை கோபால்சாமியை துரோகி என்று துரைமுருகன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திமுகவிலிருந்து வைகோ பிரிந்து இருந்தாலும் தற்போது அவர் திமுக கூட்டணியில் இருக்கிறார். கூட்டணி கட்சி தலைவர் ஒருவரையே துரோகி என அமைச்சர் துரைமுருகன் கூறியது கூட்டணி கட்சிகளுக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் நேற்றைய கூட்டத்தில் பேசும்போது ’சரியில்லாத தலைவரை தேர்வு செய்தால், அந்த தலைவர் தெரு விளக்கு போடும் பணத்தில் மனைவிக்கு கம்மல் போடுவார் என்றும் திமுக வேட்பாளர்களை தேர்வு செய்தால் அவர்கள் மக்களுக்கு சேவை செய்வார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் திமுக அரசு பொறுப்பேற்று 150 நாட்கள் தான் ஆகிறது என்றும் ஒரு குழந்தை பெற்றெடுக்கவே ஒரு தாய்க்கு 10 மாதம் ஆகிறது என்றும் அதனால் இன்னும் எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


















