தமிழ்நாடு
9 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து அறிவிப்பின்படி தமிழகம் புதுவை ஆகிய மாநிலங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் இன்று முதல் செப்டம்பர் 6ஆம் தேதி வரை கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை அதாவது செப்டம்பர் 3-ஆம் தேதி நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களிலும், செப்டம்பர் 4ஆம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் செப்டம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளிலும் தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

















