சினிமா செய்திகள்
சிம்பு ’வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு ‘அசுரன்’ தான் காரணமா?

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற திரைப்படம் ஆரம்பிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீர் திடீரென அதே கூட்டணியில் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்டது.
’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் டைட்டில் தான் ’வெந்து தணிந்தது காடு’ என்று மாற்றப்பட்டதாக ஊடகங்களில் கூறப்பட்டாலும் உண்மையில் இரண்டும் வேறு வேறு கதை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தை பின்னர் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அசுரன் மாதிரி ஒரு படம் தனக்கு வேண்டும் என்று சிம்பு கூறியதால் இந்த திட்டம் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசி ’அக்னி குஞ்சொன்று கண்டேன்’ என்ற கதையின் உரிமையை படக்குழுவினர் வாங்கி இருப்பதாகவும் அவரையே வசனம் எழுத ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
எனவே ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்திற்கும் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் டைட்டில் மாற்றப்பட்டது என்று கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை என்றும் கூறப்படுகிறது. முதலில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை எடுத்து முடித்து விட்டு அதன் பின்னர் இதே குழுவினர் ’மீண்டும் நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தையும் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் கதை ஒரு சினிமா ஹீரோவுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் காதல் என்றும் ஆனால் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் கதை முழுக்க முழுக்க கிராமத்து சூழலில் குறிப்பது என்றும் படக்குழுவினர்களிடம் தகவல்கள் வெளிவந்துள்ளன.














