தமிழ்நாடு
ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்க போல… செந்தில்பாலாஜி வீட்டிலும் ஐடி ரெய்டு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக உள்ளனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சியினரின் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே திடீரென இன்று வருமான வரி சோதனை நடத்தப்படுவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் திடீரென வருமான வரி சோதனை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனை அடுத்து அண்ணா நகர் திமுக வேட்பாளர் மோகன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜிக்கு சொந்தமான ராமேஸ்வரத்தில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த கூடுதல் தகவல் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக திமுக வேட்பாளர்கள் மற்றும் திமுக தலைவரின் உறவினர்கள் வீட்டில் சோதனை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதிக்கட்ட பிரச்சாரத்தை செய்யவிடாமல் வருமானவரித் துறையினர் மூலம் மத்தியில் உள்ள பாஜக அரசு அச்சுறுத்துவதாக திமுகவினர் குற்றம்சாட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








