தமிழ்நாடு
9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வரை ஆல் பாஸ் உத்தரவு ரத்தா..?

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரையிலான அனைத்து மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்திட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், ‘பொது தேர்வு நடத்தவில்லை என்றாலும், பள்ளிகள் அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும். அப்போது தான் பிளஸ் 1 வகுப்பில் சேரும் போது மாணவர் விரும்பும் பாடத்திட்டத்தை சேர்க்கை வழங்க முடியும்’ என்று வாதாடப்பட்டது.

இதற்கு நீதிமன்றம், ‘பொதுநலன் சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளுக்கு பிறகே முடிவுகள் எடுப்பர். எனவே எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது.
அதேநேரம், 10ம் வகுப்பில் இருந்து 11ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்கள், விருப்பப் பாடத்தை தேர்வு செய்யும் வகையில், அவர்களின் தகுதியை கண்டறிய பள்ளிகள், தேர்வு நடத்திக் கொள்ளலாம்’ என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.















