தமிழ்நாடு
திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு: காங்கிரசுக்கு கிடைத்தது எத்தனை தொகுதிகள்?

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
காங்கிரஸ் கட்சியின் தரப்பில் இருந்து 40 தொகுதிகளை கேட்டதாகவும், ஆனால் திமுக தரப்பில் இருந்து 18 முதல் 20 தொகுதிகளில் மட்டுமே தரமுடியும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியானது.
இதனையடுத்து நேற்று மாலை திடீரென காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பேசிய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த உடன்பாட்டின்படி காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமின்றி ஒரு ராஜ்யசபா தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் என்று உறுதிமொழி அளித்துள்ளதாகவும் தெரிகிறது.
இதுகுறித்த ஒப்பந்தம் இன்று காலை 10 மணிக்கே கையெழுத்தாகும் என்றும் இந்த ஒப்பந்தத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி ஆகியோர் கையெழுத்திட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த தினேஷ் குண்டுராவ், ‘இன்று காலை 10 மணிக்கு திமுக – காங்கிரஸ் கட்சி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் போது அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.








