தமிழ்நாடு
வெளிநாடு செல்ல உள்ள எடப்பாடி பழனிசாமி: பொறுப்புகளை யாரிடம் ஒப்படைப்பதில் குழப்பம்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுக்கு பயணம் செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக பேசப்பட்டு வருகிறது. முதல்வர் வெளிநாட்டுக்கு செல்லும் போது அவரது பொறுப்புகள் துணை முதல்வரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் இதில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முதல்வரின் வெளிநாட்டு பயணம் திட்டமிடப்பட்ட ஒன்று. இந்த பயணத்தில் முதலில் லண்டன் செல்லும் எடப்பாடி பழனிசாமி அடுத்து அமெரிக்கா என மொத்தம் 13 நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார். 13 நாட்கள் முதல்வர் வெளிநாடு செல்வதால் அவரது துறைகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என்பது மரபு. அந்த பொறுப்பு துணை முதல்வர் ஓபிஎஸ்சிடம் போகுமா அல்லது எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான அமைச்சர்களான தங்கமணி அல்லது வேலுமணி இருவரில் ஒருவரிடம் கொடுப்பாரா என்பதுதான் அதிமுகவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தான் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டால் ஓபிஎஸ் ஏதாவது செய்து தனது முதல்வர் பதவிக்கு ஆப்பு வைத்துவிடுவார் என எண்ணி தனது பொறுப்புகளை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டதாகவும், இந்த பஞ்சாயத்து அமித் ஷாவிடம் சென்றதாகவும் தகவல்கள் வருகின்றன. அமித் ஷா பொறுப்புகளை ஓபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க அறிவுறுத்தியும் எடப்பாடி அதற்கு முடிவு கொடுக்கவில்லையாம். இதனால் எடப்பாடி பழனிசாமி தனது பொறுப்புகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பாரா அல்லது தனக்கு நெருக்கமான அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியிடம் ஒப்படைப்பாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

















