செய்திகள்
200 யூனிட் மின்சாரம் இலவசம் வேணுமா?: நீங்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் தெரியமா?

இரு மாதங்களுக்கு ஐநூறு யூனிட் மின்சாரத்துக்குள் செலவழிக்க என்ன வழி என்பதைப் பார்ப்போம்..
@ டியூப் லைட்: இது வெயில் காலம் என்பதால் அதிகாலையிலேயே வெளிச்சம் வந்துவிடும். ஆகவே காலை நேரத்தில் டியூப் லைட் பயன்படுத்த வேண்டாம். தேவையானால் ஒரு மணி நேரம் மட்டும் உபயோகியுங்கள். மாலையில் ஆறரை மணி முதல் இரவு அதிகபட்சம் பத்தரை மணி வரை மட்டும் பயன்படுத்துங்கள்.
ஆனால் சாதாரண டியூப்லைட் என்றால், தூக்கி எறிந்துவிட்டு LED டியூப்லைட் (20W) வாங்கிவிடுங்கள். இப்படி தினமும் 5 மணிநேரம் மட்டும், எல்.ஈ.டி. டியூப் லைட்டுகளை பயன்படுத்தினால் இரண்டு மாதங்களுக்கு 30 யூனிட்கள் மட்டுமே ஆகும்.
மின்விசிறி: பழைய விசிறியாக இருந்தால் மின்சாரம் அதிகம் எடுக்கும். ஆகவே, BLDC விசிறிகளை வாங்கிப் பயன்படுத்துங்கள். இந்த விசிறிகள் இரண்டினை தினமும் 12 மணிநேரம் பயன்படுத்தினாலே, இரண்டு மாதங்களுக்குச் சுமார் 85 யூனிட்கள் செலவாகும்.
ஏசி: இதில் கூலாக இருந்துவிடாதீர்கள், கடுமையான கட்டுப்பாடு அவசியம். தினமும் 3 மணிநேரம் – 26°C வெப்பநிலையில் – பயன்படுத்துங்கள். அதாவது இரவு ஒன்பது மணிக்குப் படுக்கச் செல்கிறீர்கள் என்றால், மூன்று மணி நேரம் கழித்து நிறுத்தி விடுங்கள்.
இப்படி தினமும் மூன்று மணி நேரம் மட்டும் ஏசி பயன்படுத்தினால் இரண்டு மாதங்களுக்குச் சுமார் 220 யூனிட்கள் செலவாகும். டைமர் செட் செய்து பயன்படுத்துவது கொஞ்சம் எளிதாக இருக்கும்.
பிரிட்ஜ்: இதை அடிக்கடி, கதவைத் திறந்து திறந்து மூட வேண்டாம். மின்சார செலவு அதிகமாகும். ஆகவே, என்னென்ன பொருட்களை எடுக்க வேண்டும் என்பதைத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். தவிர, பிரிட்ஜை சுவற்றிலிருந்து தள்ளி வைக்கவும்.
இப்படி முறையாகப் பயன்படுத்தினால், இரண்டு மாதங்களுக்கு 60 யூனிட்கள் வரை ஆகும்.
வாஷிங் மெஷின்: தினமும் பயன்படுத்துவதைத் தவிருங்கள். துணிகளைச் சேர்த்து வைத்து, வாரம் 2 அல்லது 3 முறை மட்டும் உபயோகியுங்கள். இதில் உள்ள ‘Heater’ வசதியை அவசியம் தவிர்க்கவும்.
இப்படிப் பயன்படுத்தினால் இரண்டு மாதங்களுக்கு 15 யூனிட்கள் செலவாகும்.
மிக்ஸி & கிரைண்டர்: அரைக்க வேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு, சரியான நேரம் மட்டும் பயன்படுத்துங்கள். இரண்டு மாதங்களுக்கு 10 யூனிட்கள் வரை ஆகும்.
டி.வி.: அடிக்கடி பார்க்க வேண்டாம். ஓ.டி.டி. கட் செய்து விடுங்கள். அதனால் படம், சீரியல் பார்க்கும் நேரம் குறையும். கேபிள் இணைப்பைக் கூட கட் செய்துவிடலாம். பிள்ளைகள் படிப்பும் பாதிக்காது. இணையம் மூலம் அவ்வப்போது உலக நடப்புகளை அறிந்துகொள்ளுங்கள்.
இப்படி மிகக் குறைந்த நேரம் மட்டும் பார்த்தால் இரண்டு மாதங்களுக்கு 20 யூனிட்கள் ஆகும்.
போன்: அதிகமாக போன் பயன்படுத்துவதைத் தவிருங்கள். கண்ணுக்கும் மூளைக்கும் கெடுதல் என்பதோடு, சார்ஜ் குறைந்து அடிக்கடி போட வேண்டி இருக்கும்.
அல்லது சார்ஜ் நிலைக்கும்படி, புது போன் வாங்குங்கள். முடியாவிட்டால், நண்பர்கள் வீடு, அலுவலகம், பேருந்து, ரயில் நிலையங்களில் சார்ஜ் போட்டுக்கொள்ளுங்கள். சார்ஜ் ஒயரை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.
அதே போல போன் பயன்படுத்தாத போது ஆஃப் செய்து வைத்து விடுங்கள். கடன்காரர்கள், வீடு வேணுமா லோன் வேணுமா என்கிற தொல்லைகள் குறையும்.
கார் மற்றும் பைக் பேட்டரி: பழைய பேட்டரி என்றால் அடிக்கடி சார்ஜ் ஏறி மின்சாரத்தை அதிகம் செலவு செய்யும். ஆகவே பேட்டரியை மாற்றுங்கள்.
பொதுவாக வெளியில் செல்வதைக் குறைத்துக்கொள்ளுங்கள். மிக மிக அவசியம் என்றால் மட்டும் கார், பைக் பயன்படுத்துங்கள். முடிந்தவரை நடந்துசெல்லுங்கள். “மொட்டை வெயிலில் எங்கே நடந்து செல்கிறீர்கள்” என யாராவது கேட்டால் வெட்கப்படாதீர்கள். “காலையில் வாக்கிங் போகலை.. அதான்” என கெத்தாகச் சொல்லுங்கள்.
அல்லது, சைக்கிள் பயன்படுத்துங்கள். இல்லாதவர் புதிதாக வாங்குங்கள். தூரம் என்றால் பேருந்தில் பயணியுங்கள்.
ஆக, இன்வெர்ட்டர் பயன்பாட்டை 20 யூனிட்டுகளில் அடக்கலாம்.
மொத்தம்: இப்போது கணக்குப்போட்டுப் பாருங்கள். சுமார் 460 யூனிட்கள்தான் வரும்.
இப்படித் திட்டமிட்டுப் பயன்படுத்தினால் நீங்கள் 500 யூனிட் வரம்பிற்குள் இருந்து, 200 யூனிட் இலவச மின்சாரச் சலுகையைப் பெற முடியும்.
எவ்வளவு மிச்சம்?
500 யூனிட் வரம்பிற்குள் , 200 யூனிட் சலுகை என்பதால், சுமார் ரூ. 1,450 தான் வரும். இரண்டு மாதங்களுக்கு 500ஐ தாண்டி ஒரு யூனிட் போய்விட்டாலும் அதாவது 501 யூனிட் என்றால்கூட சுமார் 3,061 ரூபாய் கட்டணம் ஆகிவிடும். .
கிட்டத்தட்ட இரு மடங்கு!
ஆகவே தமிழ்நாடு முதல்வரின் ஆணைப்படி கிடைத்துள்ள வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி, மின் சிக்கனத்துடன் செயல்பட்டு 200 யூனிட் இலவச மின்சாரத்தைப் பெறுங்கள்!













