இந்தியா
வளைகுடா போர் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு – விரைவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு.

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கடுமையான போர் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு மேற்கு ஆசியா வளைகுடா பகுதிகளில் போர்ச்சூழல் பரவி கவலை தரக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தொடர்ச்சியாக இப்போது சமையல் எரிவாயு தடடுப்பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளதால் ஒன்றிய அரசு வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நேற்று முதலே பல்வேறு பகுதிகளில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்பப்பட்டு விட்டது.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தடுக்கும் நோக்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உயர்நிலைக்குழு அறிவுறுத்தலின்படி சில அவசர முடிவுகள் எடுக்கப்பட்டன.
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் முன்பதிவு 21 நாள்கள் இடைவெளியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 25 நாள்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சிலிண்டர் விநியோகிக்கப் பட்ட 25 நாள்களுக்குப் பிறகே அடுத்த முன்பதிவை இனி செய்ய முடியும்.
அணைத்து பொதுத்துறை நிறுவனங்களும் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர்களை மட்டுமே விநியோகிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்கள் விலை உயர்த்தப்படும் அல்லது விநியோகம் நிறுத்தப்படும்.
பீகார், மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வணிக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகத்தை தடையின்றி தொடர வேண்டும் என சென்னை பெங்களுரு ஓட்டல்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 130 டாலருக்கு மேல் செல்லாத வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்ப்படக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றின் விலை விரைவில் உயரப் போவதாக சில நம்பத் தகுற்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்து வருகின்றன.
இப்போதைக்கு போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை இல்லாததால் மக்கள் எரிவாயுவினை சிக்கனமாக பயன்படுத்துதல் நல்லது. பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


