இந்தியா
வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் மக்களுக்கு கிடைக்கப்போகும் பணமழையும் பரிசுமழையும் – திக்கு முக்காடப் போகிறார்கள்.

தமிழ்நாட்டின் 16வது சட்டமன்றம் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தனது 5 ஆண்டுக் கால பதவிக்காலத்தை வெற்றிகரமாக முடிக்க இருக்கிறது. 17வது சட்டமன்றத்துக்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்குப் பின் மே மாதம் 7 முதல் 10 தேதிக்குள் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் முடிவுடைந்து இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இப்போதே தேர்தல் திருவிழா தமிழ்நாடு முழுதும் களைகட்டத் தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் பல்வேறு கட்ட பிரச்சார உத்திகளைக் கையாண்டு தங்கள் பிரச்சாரங்களை நடத்தத் தொடங்கி விட்டன. கூட்டணிப் பேச்சு வார்த்தைகளும் இறுதிக் கட்டத்தை எட்டி வருகின்றன.
அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஓட்டு போடுபவர்களுக்கும் தங்களுக்காக தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும் அவர்கள் சந்தோஷமடையும் வகையில் அவர்களுக்குத் தேவையானவற்றை பணமாகவும் பரிசுப் பொருள்களாகவும் கொடுத்து அவர்களின் மனமும் வயிறும் நிரம்பச் செய்கின்றனர்.
முன்னாள் இந்நாள் அரசியல்வாதிகள் இப்போதே தங்கள் தொகுதியில் பரிசு மழைகளை கொட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு அரசியல் கட்சியும் தாங்கள்தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற தங்கள் எண்ணங்களுக்கு வலு சேர்க்கும் விதமாக பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை தயார் செய்து மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
ஆளும் கட்சி தங்களது திட்டங்களை முடக்க நினைக்கிறார்கள் என்று அதிரடியாக சில காரியங்களை செய்யும்போது ஓட்டுக்காக லஞ்சம் கொடுக்கிறார்கள் என்கிறார்கள்.
இப்போதெல்லாம் சாதாரண பொதுஜனங்கள் எல்லா அரசியல் கட்சியினரும் கொடுக்கும் பணம் பொருள் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டு அவர்கள் ஆதர்ச நாயகர்களாக யாரை நினைக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டுப் போட்டுவிட்டுச் செல்கின்றனர்.
அந்த சாதாரண பொதுஜனத்தின் காட்டில் இந்த பணமழையும் பரிசுமழையும் இப்போது வேண்டாமென்றால் மறுபடியும் 5 ஆண்டுகளுக்குப் பிறகுதானே கிடைக்கும். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் நினைப்பதில் என்ன தவறு என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
கோயிலக்கு சாமி கும்பிட போகும் எல்லோரும் எனக்கு இதெல்லாம் வேணும். நீ இதையெல்லாம் செய்தால் நான் உனக்க இதையெல்லாம் செய்கிறேன் என்ற ஒப்பந்தம்தானே போடுகிறார்கள். லஞ்சம் என்பது அங்கேயே தொடங்குகிறது என்பது உண்மைதானே.
இந்த தேர்தல் காற்றில் அடித்து வருவதை கிடைத்தவர்கள் கைப்பற்ற நினைப்பதில் என்ன தவறு? ஜெயித்த பின்னர் இந்த அரசியல்வாதிகள் தங்களை கவனிப்பார்களோ மாட்டார்களோ என்று மக்கள் நினைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கு யார் காரணம்?
தேர்தல் காற்றில் வெற்றி பெறுவோர் பெறப்போகும் ஆதாயங்களை நினைத்து சாமானிய பொதுஜனம் காற்றுள்ளபோதே துற்றிக் கொள்ள நினைப்பதில் தவறேதும் இல்லை.


