வணிகம்
Gold Price Prediction 2026: இந்த ஆண்டில் தங்கம் விலை ரூ.1.5 லட்சத்தை தொடுமா? நகை வியாபாரிகள் சங்க தலைவர் கணிப்பு!

தங்கம் என்பது நகை அணிவதற்கான பொருளாக மட்டுமல்லாமல், தலைமுறைகளாக தொடரும் பாதுகாப்பான முதலீட்டு சாதனமாகவும் விளங்குகிறது. அதனால் தான் இந்தியாவில் பெண்களுக்கு பாரம்பரியமாக தங்க நகைகள் வழங்கப்பட்டு, புகுந்த வீட்டிற்கு அனுப்பும் வழக்கம் இருந்து வருகிறது.
இந்நிலையில் சமீப காலங்களில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, புதிய உச்சங்களை எட்டி வருகிறது. இதனால் சாமானிய மக்கள் தங்க நகை வாங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டில் மட்டும் தங்கம் விலை இரட்டிப்பாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில், தற்போது தொடங்கியுள்ள 2026 ஆம் ஆண்டில் தங்கம் விலை குறையுமா? அல்லது மேலும் உயருமா? என்பதே பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து பேசிய சென்னை தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி, தங்கம் விலை குறைவதற்கு எந்தவிதமான வாய்ப்பும் இல்லை என்றும், மாறாக இந்த ஆண்டில் மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1.5 லட்சத்தை எட்டக்கூடும் என்றும் அவர் கணித்துள்ளார். சர்வதேச சந்தை நிலவரம், பணவீக்கம், முதலீட்டு தேவை போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இதனால் வருங்காலத்தில் தங்கம் நகையாக வாங்குவதற்குப் பதிலாக, முதலீட்டு நோக்கில் வாங்கும் போக்கு அதிகரிக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.













