இந்தியா
நீதிமன்ற உத்தரவு இல்லாமல் உயிலை அமல் படுத்த முடியுமா?…

இந்திய வாரிசுரிமைச் சட்டம் பிரிவு 213 ல் இந்திய நாடாளுமன்றம் இந்த பிரிவை தற்போது தளர்த்தி உள்ளதால் நீதிமன்ற அனுமதி பெறாமலேயே இனிவருங்காலங்களில் உயிலை நேரடியாக அமல்படுத்திக் கொள்ள முடியும்.
ஆங்கிலேயர் காலத்தில் பிரசிடென்சி நகரங்களாக இருந்த சென்னை மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் எழுதப்படும் உயில்களுக்கு ஒருவர் உயில் எழுதி வைத்திருந்தாலும் அந்த உயில் உண்மையானதுதான் என நீதிமன்றத்தில் நிரூபித்து “புரோபேட்“ என்னும் உறுதிப்படுத்தும் சான்றிதழ் வாங்கினால் மட்டுமே சொத்தை வாரிசுகள் பெயருக்கு மாற்ற முடியும். குடும்பத்துக்குள் சண்டையே இல்லை என்றாலும் இந்த நடைமுறை கட்டாயமாக இருந்தது. இதனைப் பெற பணமும் நேரமும் செலவானது. இதைத்தான் இப்போது தளர்த்தியிருக்கிறது அரசு.
சுதந்திரம் பெற்று பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் நகரங்களுக்கு இடை்யேயான ஏற்றத் தாழ்வுகள் பல்வேறு விதமான சிக்கல்களை எற்படுத்தியுள்ள போதிலும் தற்போது இந்த சட்டத் திருத்தத்தின் வழியாக அந்த அநீதி களையப்பட்டுள்ளது.
இந்த கட்டாய “புரோபேட்“ என்பது இந்து பவுத்த சீக்கிய ஜெயின பார்சி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் எழுதும் உயில்களுக்கு மட்டுமே பொருந்தும். இதர சமயத்தினருக்குப் பொருந்தாது.
மேலும் “புரோபேட்“ நடைமுறை முழுமையாக நீக்கப்படவில்லை என்பதும் இங்கே கவனிக்கத் தக்கது. அது “கட்டாயம்“ என்ற நிலையிலிருந்து “தேவைப்பட்டால் பெற்றுக் கொள்ளலாம்“ என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பல குடும்பங்களில் மூதாதையர் சொத்து என்பது வெறும் பணமதிப்பு கொண்டது மட்டுமல்ல. அதற்கு உணர்வு ரீதியான தொடர்புகளும் இருக்கும். எனவே குடும்பத்தில் அமைதியும் இணக்கமும் இருந்தால் மட்டுமே இந்த புதிய நடைமுறை பொருந்தும்.
ஒருவேளை யாரேனும் உறவினர் இந்த உயில் போலியானத உன்று சண்டைக்கு வந்தால் அப்போது நீங்கள் நீதிமன்றம் சென்று “புரோபேட்“ வாங்குவதே பாதுகாப்பானது. சண்டை இல்லாத பட்சத்தில் நீதிமன்ற படிகளை ஏற வேண்டிய அவசியமில்லை.
