இந்தியா
தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் அறிமுகம்

வரும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு முன்கூட்டியே தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகள் தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் ஒரு பெரும் பாய்ச்சலாக பேசுபொருளாக மாறியிருக்கிறது.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் புதிய முன்னெடுப்பாக அரசு 20 புதிய இருக்கை வசதி கொண்ட வால்வோ மல்டி ஆக்சில் சொகுசு பேருந்துகளை கொள்முதல் செய்துள்ளது. பெங்களுருவில் இந்த பேருந்துகளை கட்டமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் முதற்கட்டமாக 8 பேருந்துகள் சென்னை அரசு போக்குவரத்து பணிமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. மீதி 12 பேருந்துகள் ஒருசில வாரங்களில் வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- நீல நிறத்திலான இந்த பேருந்துகளின் நீளம் 15 மீட்டர். ரூ.1.75 கோடியில் கொள்முதல் செய்யபட்டுள்ள இந்த பேருந்துகளின் முன்புறமும் பின்புறமும் டிஜிட்டல் வழித்தட பலகை வைக்கப்பட்டுள்ளது. 51 இருக்கைகள் செமி ஸ்லீப்பர் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
- பயணிகள் தங்கள் பொருட்களை வைக்க வண்டியின் கீழ்தளத்தில் 14 மீட்டர் ஸ்டோரேஜ் பாக்ஸ் உள்ளது.
- தீ விபத்துக்கள் ஏற்பட்டால் தடுக்க பேருந்தின் உள்ளேயே தண்ணீர் தெளிப்பான் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
- இருக்கைகளில் கைபேசி சார்ஜிங் மற்றும் ரீடிங் லைட் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
- முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி இறங்க வசதியாக பேருந்தின் உயரத்தை ஏற்றி இறக்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் கூறுகையில் இந்த பேருந்து கட்டணம் சாதாரண எஸ்.இ.டி.சி. பேருந்துகளைக் காட்டிலும் சற்று கூடுதலாக இருக்கும் என்று கூறினார்.
