தமிழ்நாடு
இழுபறி ஏற்பட்டாலும் பாஜகவுக்கு ஆதரவில்லை: அமமுக அதிரடி!

மக்களவை பொதுத்தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகும். அதன் பின்னர் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது தெரியவரும். இதில் பாஜக, காங்கிரஸ் இடையே பிரதான போட்டி நிலவுகிறது.
பெரும்பாலான கருத்துக்கணிப்புகளும், அரசியல் விமர்சகர்களும் கூறுவது, இந்த முறை பாஜகவோ, காங்கிரஸோ யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது இழுபறி நிலைதான் உருவாகும். மாநில கட்சிகளின் ஆதரவிலேயே இந்தமுறை ஆட்சி அமைக்கப்படும் என யூகிக்கப்படுகிறது. இதனால் மாநில கட்சிகளின் பங்களிப்பு இந்த தேர்தலில் அதிகமாக உள்ளது.
இந்த சூழ்நிலையில் மாநில கட்சிகளின் ஆதரவை பெற பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முயலும். ஆனால் யாருக்கும் ஆதரவை கொடுக்க வேண்டும் என்பது மாநில கட்சிகளின் கைகளில் உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மாநில கட்சியாக உள்ள டிடிவி தினகரனின் அமமுக கட்சி தங்கள் ஆதரவு கண்டிப்பாக பாஜகவுக்கு ஒருபோதும் இருக்காது என தொடர்ந்து கூறி வருகிறது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் இது தொடர்பாக பேசினார். அப்போது, மக்களவைத் தேர்தல் முடிவிற்கு பின் இழுபறி நிலை ஏற்பட்டாலும் நிச்சயமாக பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கமாட்டோம். பாஜக தவிர மற்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக கழக பொதுச்செயலாளர் முடிவெடுப்பார் என தெரிவித்தார். அமமுக தொடர்ந்து பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.



















