இந்தியா
முதலமைச்சர் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் பல்கலைக்கழகங்களின் வேந்தருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள அணைத்து பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் 16.04.2025 புதன்கிழமை மாலை சென்னையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது.
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளது என்ற மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டம் அரசிதழில் சனிக்கிழமை (ஏப்.12) வெளியான நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பல்கலைக்கழக வேந்தா் என்ற முறையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் முதல் ஆலோசனைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆலோசனைகளின் சாராம்சம் பின்வருமாறு.
மாணவர்களிடையே சமத்துவத்தையும், சமநீதியையும் கற்பிப்பதுதான் தலையாய கடமையாக இருக்க வேண்டும். பிரிவினையைத் துாண்டக்கூடிய கருத்துக்களுக்கோ, நடவடிக்கைகளுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை. இதில் எந்தவித சமரசங்களையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
அறிவியல் தொழில்நுட்பங்களில் உலகம் வேகமாக மாறிவரும் நிலையில், இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நமது பல்கலைக் கழகங்கள் செயல்பட வேண்டும்.
நமது பல்கலைக்கழகங்களில் சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொள்வது ,புதிய உலகத்தரம் வாய்ந்த கல்விமுறைகளை அறிமுகம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நாம் வடிவமைக்க விரும்பும் எதிர்கால திட்டமானது பொருத்தமான கல்வி, வேலைவாய்ப்பு, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ஆகிய மூன்று துாண்களை உள்ளடக்கியது. இம்மூன்றும் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
பல்கலைக்கழகங்கள் வளரும் தேவைகளுக்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்.
உயர்கல்வியின் தலைமையகமாக தமிழ்நாடு திகழ வேண்டும்.
ஆரய்ச்சி மற்றும் புதுமைக்கான மையங்களாக உயர்கல்வியின் உலகளாவிய தலைமையகமாக தமிழ்நாடு திகழ வேண்டும். தடையற்ற, தரமான, அணைவரும் தலைநிமிரத் தேவையான கல்வியைப் பல்வலைக்கழகங்கள் வழங்க வேண்டும்.
பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் முறைகள் ஆகியவற்றை மாற்றியமைக்க வேண்டும்.
கல்வி நிலையங்களில் அறிவியல் புர்வமான கருத்துக்களும், கல்வியும் மட்டுமே போதிக்கப்பட வேண்டும். கல்வி நிலையங்களில் எந்த காரணத்தைக் கொண்டும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக் கதைகளையோ தவறியும் மாணவர்களிடம் பரப்பி விடக் கூடாது. கல்வியின் அடிப்படையே அறிவைச் செம்மைப் படுத்துவதுதான்.
நம் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்துச் சான்றிதழ் மட்டும் பெற்றால் போதாது. உலகம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வினை அளிப்பவர்களாக அவர்கள் திகழ வேண்டும். அதற்கு நம் பல்கலைக்கழகங்கள் எதிர்காலத் தேவைகளுக்கேற்ப அப்டேட் ஆக வேண்டும்.
உயர்கல்விக்காக உலக நாடுகளுக்கு நாம் செல்வது போல உலகெங்கும் இருந்து திறமைகளை ஈர்க்கும் கற்றல் தலைமையகமாகத் தமிழ்நாட்டை மாற்ற வேண்டும்.














