தமிழ்நாடு
கேடுகெட்ட மோடி ஆட்சி, மானங்கெட்ட எடப்பாடி ஆட்சி: உதயநிதி ஆவேசம்!

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது. குறிப்பாக திமுக தனது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாகிவிட்டது. இதனையடுத்து திமுகவின் தென் சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் தமிழச்சி தங்கபாண்டியன்.
இவரது தேர்தல் பணிமனையை முரசொலி நிர்வாக இயக்குநரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். தொடர்ந்து தமிழச்சி தங்கபாண்டியனுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவர். அப்போது பேசிய அவர், என்னுடைய அக்கா தமிழச்சி. இவ்வளவு அழகான வேட்பாளரை தென்சென்னை தொகுதி மக்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தவறவிடாதீர்கள். அழகு என்று நான் சொல்வது அவருடைய தோற்றத்தை அல்ல. அவருடைய அழகு தமிழையும், கலைஞரிடமும் ஸ்டாலினிடமும் கொண்ட அன்பையும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற கொள்கையையும், திமுக மீதான கொள்கைப் பிடிப்பையும்தான் அழகு என்று சொல்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கேடுகெட்ட மோடி ஆட்சியையும், மானங்கெட்ட எடப்பாடி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றார். முன்னதாக பேசிய தமிழச்சி தங்கபாண்டியன், நாட்டின் அடுத்த பிரதமரை தீர்மானிக்கப்போவது முக.ஸ்டாலின்தான். தமிழகத்தின் அடுத்த முதல்வரும் முக.ஸ்டாலின்தான். எனவே அவரின் ஆதரவு பெற்ற எனக்கு தென்சென்னை தொகுதி வாக்காளர்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.
















