இந்தியா
கடந்த 3 வருடங்களில் 9,000 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: மத்திய அமைச்சர் தகவல்!

நாடு முழுவதும் தங்கத்தை கடத்துதல் பல வருடங்களாக நடக்கிறது. இதனைத் தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 9000 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கடத்தல் தங்கம் பறிமுதல்
இந்தியாவில் விமான நிலையம், ரயில் நிலையம், கடல் மார்க்கம் மற்றும் பல வழிகளில் தங்கம் கடத்தி வருவது தொடர்கதையான ஒன்றாக இருந்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், சுங்கத் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், நாடு முழுவதிலும் கடந்த 3 வருடங்களில் 8,956 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக, மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 1,317.43 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசுக்கு கிடைக்கும் ரகசிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, புலன் ஆய்வு அமைப்புகள் தங்க கடத்தலை தடுக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இதேபோல், கடந்த இரு நாட்களுக்கு முன்பு பயணிகளிடம் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்தில் 6.62 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கத்தினை வருவாய்ப் புலன் ஆய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. ஷார்ஜாவில் இருந்து கோவை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் வந்ததன் அடிப்படையில் இந்தப் பறிமுதல் நிகழ்ந்துள்ளது.