வணிகம்
8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்ன?

மத்திய அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் 8வது ஊதியக்குழு விரைவில் அமலுக்கு வர இருக்கிறது. இதன் மூலம் சம்பள கட்டமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பள உயர்வு:
புதிய பரிந்துரையின் படி, குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் தற்போதைய ₹18,000 இலிருந்து ₹34,500 – ₹41,000 வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. 7வது ஊதியக்குழுவில் (2016) அடிப்படை சம்பளம் ₹7,000 இலிருந்து ₹18,000 ஆக உயர்த்தப்பட்டதைப்போல், இப்போது மீண்டும் பெரிய மாற்றம் ஏற்படும்.
ஃபிட்மென்ட் ஃபாக்டர்:
7வது ஊதியக்குழுவில் 2.57 ஆக இருந்த ஃபிட்மென்ட் ஃபாக்டர், இந்த முறை 1.92 முதல் 3.00 வரை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஊழியர்களின் சம்பளத்தில் கூடுதல் உயர்வு கிடைக்கும்.
கொடுப்பனவுகளில் மாற்றம்:
அகவிலைப்படி (DA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), பயண கொடுப்பனவு (TA) ஆகியவை தற்போதைய பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கேற்ப திருத்தப்படும். இதனால் ஊழியர்களுக்கு நிதி நிவாரணம் கிடைக்கும்.
ஓய்வூதியதாரர்களுக்கான நன்மைகள்:
குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்த்தப்படும்.
கம்யுடேஷன் ஆஃப் பென்ஷன் காலம் 15 ஆண்டுகளில் இருந்து 12 ஆண்டுகளாக குறைக்கப்பட வாய்ப்பு.
கூடுதல் ஓய்வூதியம் தற்போது 80 வயதில் கிடைக்கிறது. அதை 65 வயதிலிருந்தே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 5% அதிகரிக்கவும் செய்யலாம்.
மருத்துவ சேவையில் மாற்றம்:
CGHS-க்கு பதிலாக காப்பீட்டு அடிப்படையிலான புதிய திட்டம் CGEPHIS அறிமுகப்படுத்தப்படுவது குறித்து விவாதம் நடக்கிறது.
அமலாக்கம்:
8வது ஊதியக்குழு எப்போது செயல்படுத்தப்பட்டாலும், ஜனவரி 2026 முதல் அதன் நன்மைகள் அரியர் தொகையுடன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரிய நிதி நன்மை கிடைக்கும்.



















