தமிழ்நாடு
அரசு விரைவுப் பேருந்துகளில் 50% கட்டண சலுகை: அமைச்சரின் சூப்பர் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில், ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேலாக முன்பதிவு செய்து பயணம் செய்தால், கட்டண சலுகை வழங்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
50% கட்டண சலுகை
ஒரு மாதத்திற்கு 5 தடவைக்கும் மேலாக முன்பதிவு செய்து பேருந்தில் பயணம் செய்தால், 6 ஆவது தடவை முன்பதிவு செய்து பேருந்தில் பயணம் செய்யும் போது, 50% கட்டண சலுகை வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த சலுகையானது அனைத்து அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில், பொதுமக்களின் பயணத்தை ஊக்குவிப்பதற்கு தமிழக அரசு பல வசதிகளை செய்து வருகிறது. அவ்வகையில், தமிழ்நாட்டில் அதிநவீன மிதவைப் பேருந்து, குளிர்சாதனப் பேருந்து என தொலை தூரங்களில் 1,082 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 251 வழித்தடங்களில் அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பேருந்து பயணத்தை ஊக்குவிக்க கட்டண சலுகையும் அளிப்பதால், பொதுமக்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பாகும். பொதுவாக ரயில் மற்றும் பேருந்துகளைத் தான் பொதுமக்கள் அதிகமாக பயணம் செய்ய விரும்புகின்றனர். அதிலும் பேருந்து பயணத்தை விட ரயில் பயணத்தில் கட்டணம் குறைவு. இருப்பினும், பேருந்துகளில் பயணம் செய்ய மக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்.