ஆட்டோமொபைல்
சொந்த பயன்பாட்டிற்காக வாங்கும் வாகனங்களை பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகம் செல்லத் தேவையில்லை – புதிய விதிமுறைகள் அமல்

இதுவரை இருந்து வந்த விதிமுறைகளின்படி அணைத்து புதிய வாகனங்களும் முதன்முறையாக பதிவு செய்ய வாகனம் விற்பனை நிலையத்திலிருந்தே நேரடியாக சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகம் சென்று உரிய ஆவணங்களுடன் உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்தால் மட்டுமே வாகனத்துக்குரிய பதிவு எண் கிடைக்கும். ஆனால் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புதிய வாகனச் சட்டத் திருத்தத்தின்படி பிதிய வாகனங்களை இனிமேல் ஆர்டிஓ அலுவலகம் கொண்டு வரத் தேவையில்லை. இதற்காக இதர செலவு என்று வாகனம் வாங்குவோரிடம் செய்யப்படும் வசூலுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாமல் இருந்தது இன்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்களை இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பித்து பதிவு செய்ய முடியும்.
இந்த புதிய முறைப்படி புதிய வாகனங்களுக்கான விற்பனை ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாகன இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களை சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்து பதிவு எண்களை ஒதுக்கீடு செய்வார்கள். வாகன பதிவு எண்களை விற்பனை முகவர்கள் நம்பர் பிளேட்டில் பதிவ செய்து வாகனங்களில் அதனை பொருத்திய பின்னரே வாகன உரிமையாளர்களிடம் புதிய வாகனங்களை வாங்குபவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஸ்மார்ட் கார்டு வடிவிலான ஆர்.சி.புத்தகங்களை ஆர்.டி.ஓ. அதிகாரிகள் சம்பந்நதப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைப்பார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட வாகன விற்பனையாளர்கள் நிறுவனங்களுக்கு அவ்வப்போது சென்று வாகனங்களையும் விற்பனை ரசீதுகளையும் ஆய்வு செய்வார்கள்.
இதுகுறித்த அரசாணையை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஆணையர் கஜலட்சுமி வெளியிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கை மூலம் லஞ்சம் பெறுவதாக எழும் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். வாகன உரிமையாளர்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்குச் சென்று தேவையற்ற சிரமங்கள் படுவது நிறுத்தப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் தினந்தோறும் பதிவு செய்யப்படும் 8000க்கும் அதிகமான வாகனங்களில் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்கள் ஆகும். இவற்றில் கிட்டத்தட்ட 70 சதவீத வாகனங்கள் சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் இருசக்கர வாகனங்கள் ஆகும். இந்த புதிய விதிகள் வணிகப் பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு பொருந்தாது. வணிகப் பயன்பாட்டிற்கான வாகனங்கள் வாங்குவோர் வழக்கம்போல் நேரிலேயே வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.







