தமிழ்நாடு
பேரறிவாளனுக்கு 6வது முறையாக பரோல்: அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர் என்பதும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து கட்சி தலைவர்களும் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக சட்ட போராட்டங்கள் நடத்தி வருகிறார் என்பதும் முதல்வர் உட்பட பல அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். கடந்த மே மாதம் வைக்கப்பட்ட இந்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலனை செய்து பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்தது.
இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் பரோல் காலம் முடிவடையும் நேரத்தில் அற்புதம்மாள் மீண்டும் மீண்டும் பரோல் நீடிக்க மனு அளித்து வந்தார் என்பதும் அதனை அடுத்து ஐந்து மாதங்கள் தொடர்ச்சியாக பேரறிவாளனுக்கு பரோல் காலம் நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த மாதம் அளிக்கப்பட்ட பரோல் காலம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கக்கோரி அற்புதம்மாள் மனு அளித்திருந்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த தமிழக அரசு மேலும் ஒரு மாதத்திற்கு பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து ஆறாவது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

















