தமிழ்நாடு
இதுதான் ராஜதந்திரமா? ரஜினிக்கு சரமாரி கேள்விகள்!

காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு காஷ்மீரை இரண்டாக பிரித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் துணிச்சலாக முடிவெடுத்ததாக அமித்ஷாவை பாராட்டிய ரஜினிகாந்த், பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் மகாபாரதத்தில் வரும் அர்ஜுனர், கிருஷ்ணர் என ஒப்பிட்டுப் பேசினார். இது தமிழக அரசியலிலும், தமிழ் ஊடகங்களிலும் விவாதமாக மாறியது.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு ராஜதந்திரத்தோடு கையாண்டுள்ளது. அதற்காகவே பாராட்டினேன் என சில விளக்கங்களை அளித்தார். இதனையடுத்து மக்களின் உரிமைகளை பறிப்பதுதான் ராஜதந்திரமா என்று அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ரஜினியின் வார்த்தைக்காக நான் வருத்தப்படுகிறேன். ஒரு மாநிலத்தை வஞ்சித்து கோடிக்கணக்கான மக்களின் உரிமைகளை பறிப்பதில் என்ன ராஜதந்திரம் இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. மேலும், காஷ்மீர் விவகாரம் தொடர்பான வரலாற்றுப் பின்னணியை முழுமையாக புரிந்துகொண்டவர்கள் யாரும் இதனை வரவேற்க மாட்டார்கள். இந்த விவகாரத்தில் மோடி, அமித் ஷா ஆகியோரின் நடவடிக்கையை ராஜதந்திரம் என்று யாரும் சொல்ல முடியாது என விமர்சித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.