செய்திகள்
தமிழ்நாட்டுக்கு 2026–27 நிதியாண்டில் ₹58,021 கோடி வரி பங்கீடு: மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு!

2026–27 நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் வரி பங்கீட்டு தொகை குறித்து மத்திய நிதி அமைச்சகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 1) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026–27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டின் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டுக்கு ₹58,021 கோடி வரி பங்கீடாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2014 முதல் 2026 வரை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசால் மொத்தமாக ₹4 லட்சம் கோடி அளவிலான வரி பங்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது மாநிலத்தின் நிதி வளங்களை வலுப்படுத்தும் முக்கிய ஆதரவாக பார்க்கப்படுகிறது.
இதனுடன், 2025–26 நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு ₹23,834 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், மாநிலங்களின் மூலதன செலவுகளை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட 50 ஆண்டுகள் வட்டி இல்லா கடன் திட்டத்தின் கீழ், 2020–21 முதல் 2025–26 வரை தமிழ்நாட்டுக்கு ₹22,873 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மின்சார துறையில், கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பான Inter-State Transmission System (ISTS) திட்டத்திற்காக ₹550 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், நெய்வேலியில் 1,000 மெகாவாட் புதிய வெப்ப மின் திட்டம் மற்றும் 709 மெகாவாட் சோலார் மின் திட்டம் ஆகியவற்றுக்காக ₹3,000 கோடிக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கல்வி துறையில், நாடு முழுவதும் 85 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேனி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இரண்டு புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.













