இந்தியா
அம்பானி வீட்டு டிரைவருக்கு இத்தனை லட்சம் சம்பளமா? அரசு வேலையை விட அதிகம்..!

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான அம்பானி வீட்டில் டிரைவரின் சம்பளம் லட்சக்கணக்கில் என்று வெளியாகி உள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகிலேயே மிக அதிக மதிப்புடைய மாளிகை என்றால் அது பக்கிங்காம் மாளிகை தான். அதற்கு அடுத்து மிக அதிக மதிப்புடைய வீட்டை வைத்திருப்பவர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது குடும்பத்தினருடன் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்று கூறினால் அதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை, ஆனால் அவர் வீட்டு டிரைவரும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்கிறார் என்றும் அவருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் என்றும் வெளிவந்திருக்கும் செய்திதான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அம்பானி வீட்டில் டிரைவர் வாங்கும் சம்பளத்தை அரசு அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் கூட வாங்க முடியாது என்றும் அவ்வளவு பெரிய சம்பளத்தை வாங்குகிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அம்பானி வீட்டில் டிரைவர் வேலையை அவ்வளவு சீக்கிரமாக பெற்றுவிட முடியாது. உலகின் மிக உயர்ந்த விலை மதிப்புள்ள ஆடம்பர கார்களை அம்பானி வைத்துள்ளார். அந்த கார்களை எல்லாம் ஓட்டும் அனுபவம் இருக்க வேண்டும் என்றும் அதற்காகவே தனியாக தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் இன்டர்வியூ வைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
பலவித பரிசோதனைகளுக்கு பிறகு அம்பானி வீட்டின் டிரைவராக பணிக்கு அமர்த்தப்படுவார் என்றும் அம்பானி வீட்டில் தலைமை டிரைவருக்கு மட்டும் மாதம் மூன்று லட்ச ரூபாய் சம்பளம் என்றும் அவருக்கு கீழே இருக்கும் டிரைவர்களுக்கு மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படுகிறது. ஒரு மாவட்ட கலெக்டருக்கு கூட இல்லாத சம்பளம் அம்பானி வீட்டின் டிரைவர் வாங்குகிறார் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வளவு அதிகமான சம்பளம் கொடுப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஏனெனில் கோடிக்கணக்கான மதிப்புள்ள காரை இயக்குவதற்கு நல்ல அனுபவம் மற்றும் திறமை இருக்க வேண்டும் என்பதும் இந்தியாவின் மிகச்சிறந்த டிரைவர்கள் மட்டுமே அவரிடம் பணி புரிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் டிரைவர்களின் சம்பளம் குறைந்தபட்சம் 10 ஆயிரம் என்றும், அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றும் கூறப்படும் நிலையில் அம்பானி வீட்டின் டிரைவர் லட்ச கணக்கில் சம்பளம் வாங்குவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.