தமிழ்நாடு
18 ஆண்டுகளில் திமுக, 5 ஆண்டுகளில் அதிமுக, 32 ஆண்டுகள் ஆகியும் நம்மால் முடியலையே: அன்புமணி வருத்தம்

அரசியல் கட்சியை தொடங்கி 18 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது, அரசியல் கட்சி தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டது, ஆனால் அரசியல் கட்சி தொடங்கி 32 ஆண்டுகள் ஆகியும் நம்மால் ஆட்சிக்கு வர முடியவில்லையே என அன்புமணி ராமதாஸ் மிகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ராம்தாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அன்புமணி பேசியபோது ’முதலமைச்சராக வேண்டும் என்ற பதவி வெறி எனக்கு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம் என்றும் 2022ஆம் ஆண்டு வரவேற்போம் என்றும் கூறிய அவர் நாற்பது ஆண்டுகால உழைப்பில் ஆலமரம் போல் பாமக உயர்ந்து நிற்கிறது என்றும் 2026ல் ஆட்சியை கண்டிப்பாக பிடிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் அதற்காக கடுமையாக உழைப்போம் என்றும் கூறினார்.
மேலும் கட்சி தொடங்கிய 18 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வந்தது என்றும் கட்சி தொடங்கப்பட்ட 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியை பிடித்தது என்றும் ஆனால் 32 ஆண்டுகள் ஆகியும் நம்மால் ஆட்சியை ஏன் பிடிக்க முடியவில்லை என்றும் இனிமேலும் இப்படியே இருந்து விடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டு நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று மக்களிடம் கேட்போம் என்றும் மக்கள் கண்டிப்பாக நமக்கு வாய்ப்பு அளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.


















