தமிழ்நாடு
சூரியனை உதிக்க கூடாது என கட்டளையிட்ட நித்தியானந்தா!

பிரபல சாமியார் நித்தியானந்தா பல்வேறு சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர். ஆனால் இவருக்கென்று பக்தர்கள் கூட்டம் ஏராளம் உண்டு. இந்நிலையில் தற்போது அவர் கூறியுள்ள ஒரு விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தான் தியானம் செய்து முடிக்கும் வரை சூரியனை உதிக்க வேண்டாம் என கட்டளையிட்டதாக நித்தியானந்தா தனது பக்தர்கள் மத்தியில் உரையாடி உள்ளார். இதனை பிபிசி பத்திரிக்கையாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் நித்தியானந்தா, சூரிய உதயத்துடன் தான் தினமும் நமது நாள் தொடங்குகிறது. ஆனால் இன்று எத்தனை பேர் சூரியன் உதித்ததைக் கவனித்தீர்கள் என்று தெரியவில்லை. இன்று காலை நான் தியானத்தை முடிக்க காலதாமதம் ஆகிவிட்டது. எனவே நான் தியானத்தை முடிக்கும் வரையில் சூரியன் உதிக்கக் கூடாது என்று கட்டளை இட்டேன்.
அதன்படி சூரியன் 40 நிமிடங்கள் தாமதமாகவே உதித்தது. இதனை நீங்கள் கூகுளில் தேடிப் பார்த்தால் அதில் குறிப்பிட்ட நேரத்தை விட 40 நிமிடங்கள் தாமதமாகத் தான் சூரியன் உதித்து இருக்கும். நான் கட்டளையிட்டதாலே சூரியன் தாமதமாக உதித்தது என்று பேசியுள்ளார். இதற்கு அவரது பக்தர்கள் உற்சாகமாக கைகளை தட்டி வரவேற்றுள்ளனர். ஆனால் நெட்டிசன்கள் இதனை கடுமையாக விமர்சித்தும் கிண்டலும் செய்து வருகின்றனர்.

















