தமிழ்நாடு
அதிமுக எம்பிக்களை ஜடம் என விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் பாஜக மாபெரும் வெற்றியை பெற்றது. ஆனால் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தான் சந்தித்தது. தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணியே வெற்றிபெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வேட்பாளர் வெற்றிபெற்றார்.
ஆனால் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்துள்ளதாலும், அசுர பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளதாலும் திமுக எம்பிக்களால் எதுவும் செய்துவிட முடியாது என அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறவைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழக அதிமுக அரசு இந்த வெற்றியை கொச்சைப்படுத்துகிறது. அப்போது மோடி வெற்றி பெற்றது பொய் பிரச்சாரமா? 37 எம்பிக்களை வைத்து என்ன செய்வோம் என்பது நாடாளுமன்றம் கூடும்போது தெரியும். அதிமுக ஜடம் எம்பிக்கள்போல் திமுக எம்பிக்கள் இருக்க மாட்டார்கள். பெரியார் வழியில் போராடுவார்கள். மும்மொழி கொள்கையை திரும்ப பெற வைத்தோமா இல்லையா? என்றார்.

















