தமிழ்நாடு
தமிழக காவல்துறை பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறதா? கூட்டணியில் இருந்துகொண்டே கல்லெறியும் திருமா!

தமிழகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பாஜக செயல்படுவதாக கூறி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் ஒன்றை நடத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சி. இந்த ஆர்பாட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் கூட்டணியில் இருந்துகொண்டே திமுக தலைமையிலான தமிழக அரசை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.

#image_title
ஆர்பாட்டத்தில் இறுதியாக பேசிய திருமாவளவன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்னிடம் பேசிய ஸ்டாலின், நீங்கள் உறுதியாக வெற்றிபெற வேண்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொன்னார். நான், தோற்றாலும் பரவாயில்லை தனி சின்னத்தில்தான் நிற்பேன் என்று சொல்லிவிட்டு தனி சின்னத்தில் நின்றேன். நாளைக்கே எனது எம்பி பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலை பேசுகிறார், உங்களிடம் துப்பாக்கி உள்ளது. அதில் குண்டுகள் உள்ளன, சுட்டுத்தள்ளுங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று. அண்ணாமலை மீது இந்நேரம் வழக்குப் போட்டிருக்க வேண்டுமா இல்லையா? இதேபோல முஸ்லிம்கள் யாராவது பேசினால் சும்மா இருப்பீர்களா? இதேபோல திருமாவளவன் பேசினால் சும்மா இருப்பீர்களா? அண்ணாமலை வன்முறையை தூண்டுகிறார்.
90 வயதில் சமூக நீதிக்காக பயணம் செய்யும் திராவிடர் கழக தலைவர் வீரமணியின் காரை சூழ்ந்துகொண்டு அச்சுறுத்துகிறார்கள். காவல்துறை மெத்தனமாக உள்ளதா? தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறதா? தமிழக காவல்துறை பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறதா? தமிழ்நாடு காவல்துறை தமிழக முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இயங்கவேண்டுமே தவிர, அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடாது என்று ஆவேசமாக பேசினார் திருமாவளவன்.