தமிழ்நாடு
‘நானும் இனி அரசியல் வரமாட்டேன்..’ தமிழருவி மணியன் அறிவிப்பு

அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த நிலையில், தமிழருவி மணியனும் அரசியல் பக்கம் வரபோவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
உடல் நலம் கருதி அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த நேற்று (டிச. 29) உருக்கமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனும் அரசியல் செய்யப் போவதில்லை என கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடபட மாட்டேன். என் நேர்மை, தூய்மை, ஒழுக்கம் போற்றப்படாத அரசியல் களத்தில் விலகி நிற்பதே விவேகமானது. மாணிக்கத்திற்கும் கூலாங் கற்களுக்கும் பேதம் தெரியாத உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை.
2 திராவிடக் கட்சிகளால் தமிழகத்தின் பொதுவாழ்க்கை பண்புகள் பாழடைந்துவிட்டன. மக்கள் நலன் சார்ந்த மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என கனவு கண்டேன். திமுகவில் இருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன்; வரமாட்டேன்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.








