தமிழ்நாடு
வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு: டிடிவி தினகரன் சொல்லும் திட்டம்

தாங்கள் ஆட்சிக்கு வந்தால தமிழகத்தில் வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக மற்றும் திமுக தரப்பில் கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யமும் தங்கள் கூட்டணி தொகுப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று கூறிவிட்டது. இன்னும் களத்தின் பிரதானமாக இருக்கும் அமமுக மட்டும் கூட்டணி குறித்து உறுதிபட முடிவை அறிவிக்கவில்லை. சமீபத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டிடிவி தினகரன், வரும் 12-ம் தேதி மாலை, ஒய்.எம்.சி.ஏ திடலில் நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை நாங்கள் அறிவிப்போம். மக்கள் ஆதரவைப் பெற்றவுடன் நிச்சயம் நாங்கள் அதனைச் செயல்படுத்துவோம்.
அடுத்தகட்ட வேட்பாளர்கள் பட்டியல் வரிசையாக வரும். கூட்டணி குறித்து பல கட்சிகளுடன் பேசுவோம். முடிவுக்கு வந்தவுடன் சொல்வதுதான் நமக்கும் அந்தக் கட்சிக்கும் நல்லது. அப்போதுதான் தர்ம சங்கடம் இருக்காது. நான் ஒன்றும் ரகசியம் காக்கவில்லை. முடிவுக்கு வந்தபிறகு சொல்வதுதான் நல்லது. கடனில் தள்ளாடும் தமிழகம், எப்படி வெற்றிநடை போடும்? தமிழக அரசு வரிப் பணத்தை வீணடிக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.


















