தமிழ்நாடு
திமுக எம்பிக்கள் உதவ வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளை அக்கற்ற திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 42 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்கச் சாவடிகள் ஆண்டுதோறும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் கட்டணங்களை உயர்த்துகின்றனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் தமிழக சட்டசபையில் நேற்று பேசிய திமுக உறுப்பினர் சுந்தரம், உத்திரமேரூர் தொகுதியில் காலக்கெடு முடிந்தபிறகும் சில சுங்கச்சாவடிகள் மக்களிடம் பணம் வசூலித்துவருகின்றன. எனவே காலாவதி ஆன பின்பும் மக்களிடம் பணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுகவைச் சேர்ந்தவர் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறோம் என திமுகவினர் தற்போது பெருமையாக சொல்லிக்கொள்கின்றனர். தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்ற திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பேசி உதவ வேண்டும் என கோரிக்கை வைத்தார்.














