தமிழ்நாடு
சமஸ்கிருதத்தில் உறுதிமொழி: காத்திருப்போர் பட்டியலுக்கு சென்ற கல்லூரி முதல்வர்!

அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் முன்னிலையில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதை அடுத்து அந்த கல்லூரியின் முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை மருத்துவக் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தபோது சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதனால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கோபம் அடைந்ததாகவும் கல்லூரி முதல்வரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்ட தாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் மருத்துவ கல்லூரி இயக்குனரகம் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது மாணவர் தலைவர் இணையதளத்தில் இருந்து உறுதிமொழியை டவுன்லோட் செய்ததாகவும் அதில் சமஸ்கிருத வார்த்தைகள் இருந்தது தனக்கு தெரியாது என்றும் கூறினார்.
ஆனாலும் அந்த விளக்கத்தை ஏற்காமல் மருத்துவ கல்லூரி இயக்குனரகம் கல்லூரி முதல்வரை காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



















