இந்தியா
பாஜகவின் வெற்றிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து: மோடிக்கு கடிதம்!

7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார் தமிழக முதல்வர்.
மொத்தம் தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி 350 இடங்களில் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. ஆட்சி அமைக்க 272 இடங்களில் வெற்றி பெற்றாலே போதுமானது ஆனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் இந்த எண்ணிக்கையை தாண்டி முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 90 இடங்களிலும் மற்ற கட்சிகள் 102 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அதாவது கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் கூட ஆட்சி அமைக்க கூடிய நிலையில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து பிரதமர் மோடிக்கு பல்வேறு பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பாஜக மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியதாக செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. அந்த கடிதத்தில், பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதற்கு நான் வாழ்த்துகிறேன். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வருவதன் மூலமாக இந்த நாட்டு மக்கள் உங்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். உங்களுக்கும் உங்கள் வழிகாட்டுதல் கீழ் அமைய உள்ள இந்திய அரசாங்கத்துக்கும் எனது வாழ்த்துக்கள் என கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.


















