தமிழ்நாடு
நக்கீரன் மீதான 23 வழக்குகள் உள்பட பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகள் வாபஸ்!

கடந்த ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் வாபஸ் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இதில் நக்கீரன் வார இதழ் மீது மட்டும் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் அந்த வழக்குகள் உள்பட அனைத்தும் வாபஸ் பெறப்பட்டு உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
2012-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறு பேச்சுக்கள் மற்றும் செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர், அச்சிட்டவர், வெளியிட்டவர் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர், பேட்டியளித்தவர் ஆகியோர் மீது சுமார் 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.
அவற்றுள் ‘தி இந்து’ நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும், ‘டைம்ஸ் ஆஃப் ஒந்தியா’ நாளிதழின் ஆசிரியர் மீது 5 வழக்குகளும், ‘எக்கனாமிக்ஸ் டைம்ஸ்’ நாளிதழின் ஆசிரியர் மீது 1 வழக்கும், ‘தினமலர்’ நாளிதழின் ஆசிரியர் மீது 12 வழக்குகளும், ‘ஆனந்த விகடன்! வார இதழின் ஆசிரியர் மீது 9 வழக்குகளும், ‘ஜுனியர் விகடன் இதழின் ஆசிரியர் மீது 11 வழக்குகளும் போடப்பட்டிருந்தது.
அதேபோல் நக்கீரன் இதழின் ஆசிரியர் மீது 23 வழக்குகளும், ‘முரசொலி’ நாளிதழின் ஆசிரியர் மீது 17 வழக்குகளும், ‘தினகான் நாளிதழின் ஆசிரியர் மீது 4 வழக்குகளும் மேலும், புதிய தலைமுறை தொலைக்காட்சி, நியூஸ் 7 தொலைக்காட் சி, ‘சத்யம்’ தொலைக்காட்சி, ‘கேப்டன்’ தொலைக்காட்சி, ‘என்.டி.டி.வி தொலைக்காட்சி, ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி மற்றும் ‘”கலைஞர்’ தொலைக்காட்சி ஆகியவற்றின் ஆசிரியர்கள் மீது தலா ஒரு வழக்கு வீதம் 7 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.
திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் அறிக்கையில் “பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட அவதூறு வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட 90 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆணையிட்டுள்ளார்கள்.












