தமிழ்நாடு
3வது நாளாக தொடரும் பேருந்து ஸ்டிரைக்: பொதுமக்கள் அவதி!

புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் குறைந்த அளவே இயங்கி வருகின்றன.
சென்னையை பொறுத்த வரை மெட்ரோ ரயில், மின்சார ரயில் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் இருப்பதால் பொதுமக்கள் ஓரளவு தங்கள் பயணத்தை நிறைவேற்றி வருகின்றனர். ஆனால் சென்னையை தாண்டி மற்ற பகுதிகளில் ஒரு சில தனியார் பேருந்துகளும், குறைந்த அளவில் அரசு பேருந்துகளும் மட்டுமே இயங்கி வருவதால் பொதுமக்கள் பெரும் அவதியில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் போக்குவரத்து ஊழியர்களை அழைத்து தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ளதால் பேச்சுவார்த்தை நடத்தினாலும் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிட முடியாத நிலையில் உள்ளது.
எனவே இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து ஊழியர்கள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று தேர்தலுக்குப்பின் அவர்கள் தங்கள் கோரிக்கையை வைக்கலாம் என்பதே தற்போதைய நிலையாக உள்ளது. இருப்பினும் இந்த வேலை நிறுத்தம் தொடருமா? அல்லது போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்



















