இந்தியா
கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்த பிஷப் பிராங்கோவின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!

கேரளா மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரீ ஒருவர் பஞ்சாப்பிலுள்ள ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் அதிரடியாக பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவரது ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பாலியல் விவகாரம் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் வழக்கு பதிவு செய்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்தனர். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் கன்னியாஸ்திரீகள் போராட்டம் நடத்தி நியாயம் கேட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீ டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்துக்கு பிஷப் குறித்து கடிதம் ஒன்று எழுதினார். அதில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை பிஷப் 13 முறை தன்னை இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.
இதற்கிடையில் பிஷப் முன்ஜாமின் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் கேரள சிறப்பு விசாரணைக்குழு கடந்த மூன்று நாட்களாக பிஷப் பிராங்கோவிடமும், பதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீயிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் முடிவில் பிஷப் பிராங்கோ மீது உள்ள குற்றச்சாட்டுக்கு முகாந்திரங்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பிஷப் பிராங்கோவை கோட்டயம் போலீசார் செப்டம்பர் 21-ஆம் தேதி அதிரடியாக கைது செய்தனர்.
இதனையடுத்து பிஷப் தரப்பில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதனை நிராகரித்த நீதிமன்றம் அக்டோபர் 6-ஆம் தேதி வரை பிஷப் நீதிமன்ற காவலில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மீண்டும் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, பிஷப் பிராங்கோ ஜாமீனில் வெளியே வந்தால், விசாரணை பாதிக்கப்படும், சாட்சிகளை களைக்கக்கூடும் என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவரது ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.
















