சினிமா
மாநாடு பட சர்ச்சை.. பரபரப்பு அறிக்கை வெளிட்ட அண்ணாமலை

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தின் சில காட்சிகள் வன்னியர் சமூகத்தை குறிப்பதாக கூறி சர்ச்சைகள் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யாவும், அப்படத்தின் இயக்குனர் ஞானவேலும் இதுபற்றி விளக்கமளித்தனர். ஆனாலும், இந்த பிரச்சனை முடிந்தபாடில்லை. தற்போது மாநாடு படமும் இந்த பிரச்சனையில் சிக்கியுள்ளது.

சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள மாநாடு திரைப்படத்தில் இந்து – முஸ்லீம் ஒற்றுமையை சீர் குலைக்கும் காட்சிகள் இருப்பதாகவும் முதல்வர் இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என வேலூர் பாஜக நிர்வாகி இப்ராஹிம் கூறியிருந்தார். இது கடும் விமரசனத்திற்கு ஆளானது.சினிமாவை வைத்து பாஜக அரசியல் செய்வதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘திரைப்படம் என்பது பெரும்பாலும் இயக்குனரின் கற்பனையின் வெளிப்பாடு. நமது கட்சியை சேர்ந்த சிலர் சில நேரங்களில் பொழுதுபோக்கு திரைப்படங்களை விமர்சிக்க துவங்கியுள்ளனர்.
கட்சியில் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் கூறும் கருத்து கட்சியின் கருத்தாக மாறும் சூழல் இருக்கிறது. நமது இலக்கு நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு. அதை மனதில் கொண்டு செயல்படுவோம். திரைப்படத்துறை குறித்து தேவையற்ற விவாதங்கள், கருத்துக்களை கட்சி நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


















