தமிழ்நாடு
மூடப்படும் ஃபோர்டு நிறுவனத்தை வாங்குகிறதா டாடா?

உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான போர்டு நிறுவனம் தமிழகம் மற்றும் குஜராத்தில் இயங்கி வந்த இரு ஆலைகளையும் மூட முடிவு செய்திருப்பதாகவும் அந்நிறுவனத்திற்கு கடந்த பத்து ஆண்டுகளில் 14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் சென்னையில் உள்ள மறைமலைநகர் மற்றும் குஜராத்தில் உள்ள சனந்த் ஆகிய பகுதிகளில் கார் உற்பத்தி செய்யும் தொழிற் சாலையை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. ஆண்டுக்கு 4 லட்சம் கார்களை உற்பத்தி செய்து வந்த நிலையில் தற்போது மிக குறைந்த அளவே கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் குஜராத் ஆகிய இரண்டு இடங்களிலும் உள்ள நிறுவனத்தை மூடுவதற்கு போர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அந்த நிறுவனத்தால் மறைமுகமாக பலர் வேலைவாய்ப்பு பெற்று வந்த நிலையில் அவர்களும் வேலை வாய்ப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஃபோர்டு நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு தமிழக அரசும் போதிய ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தொழில் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் அவர்கள் கூறியபோது ஃபோர்டு நிறுவனத்தை டாட்டா நிறுவனம் வாங்கினால் தமிழக அரசு தேவையான ஒத்துழைப்பை அளிக்கும் என்றும் அதே நேரத்தில் ஃபோர்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
இது குறித்து டாடா நிறுவனம் விரைவில் முடிவெடுக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே டாடா நிறுவனம் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும் நிலையில் போர்டு நிறுவனத்தை வாங்கினால் அதையும் வெற்றிகரமாக லாபகரமான தொழிற்சாலையாக விரைவில் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


















