தமிழ்நாடு
ஊரடங்கு முடிந்தவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: சசிகலா அறிவிப்பு!

கடந்த சில நாட்களாக சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த ஆடியோக்களுக்கு அதிமுக தலைவர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திடீரென சற்றுமுன் சசிகலா ஊரடங்கு முடிந்தவுடன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று விட்டு அதன் பின்னர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக தற்போது ஆட்சியை இழந்து எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்து உள்ள நிலையில் சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் குதிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜர், பார்த்திபன் உள்ளிட்ட அதிமுகவினர்களுடன் தொலைபேசியில் பேசிய சசிகலா தற்போது கூட பொதுச் செயலாளர் என்ற முகவரியில் தொண்டர்களிடம் இருந்து கடிதங்கள் ஏராளமாக வந்து கொண்டிருப்பதாகவும், அதிமுக தொண்டர்கள் அனைவரும் தம்முடனேயே இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சிவி சண்முகம் பிரச்சனை குறித்த பேச்சுக்கு அதெல்லாம் காற்றில் பறக்கும் கண்ணுக்கு தெரியாத தூசி போன்றது என்று கூறிய சசிகலா அனைவரும் பார்த்து கேட்கும் படி தனது செயல்பாடு இருக்கும் என்று தொண்டர்களிடம் சசிகலா உறுதி கூறியுள்ளார். ஊரடங்கு முடிந்தவுடன் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றுவிட்டு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்றும் அப்போது உண்மையான அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்று தெரியும் என்றும் சசிகலா கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.








