இந்தியா
மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு: 100 டன் ஆக்சிஜனை வழங்குகிறார் அம்பானி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக பாதிப்பு அடைந்த மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளதை அடுத்து அங்கு முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கெடுபிடிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகள் தினமும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அவர்கள் 100 டன் ஆக்சிஜனை ஆக்சிஜன் சிலிண்டரை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதை அடுத்து தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொடுத்து உதவ வேண்டும் என பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியிருந்தார். மத்திய அரசிடமிருந்து இதுகுறித்து இன்னும் பதில் வராத நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திற்கு 100 டன் ஆக்சிஜனை இலவசமாக வழங்க இருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த தகவலை மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து முகேஷ் அம்பானிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.




















