தமிழ்நாடு
குட் நியூஸ் மக்களே… சென்னையிலும் தமிழகத்திலும் மழை தொடரும் – விரிவான விவரம்!

கோடை வெப்பத்தால் தகிதகித்து வந்த சென்னை, இன்றைய திடீர் மழையால் குளிர்ப் பிரதேசம் போல மாறியுள்ளது. இந்த மழைப் பொழிவானது அடுத்து வரும் 48 மணி நேரத்துக்குத் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிக்கையில்,
‘குமரிக்கடல் பகுதியில் 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று தமிழக உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.

நாளை தமிழக உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அதிகபட்சமாக 11 சென்டி மீட்டர் மழைப் பெய்துள்ளது. அதைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடியில் 8 சென்டி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.

















