இந்தியா
இந்திய பங்குச்சந்தை: ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் கோடி இழப்பு

இந்திய பங்குச் சந்தை இன்று படு மோசமாக வீழ்ச்சி அடைந்து உள்ளதை அடுத்து ஒரே நாளில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு சுமார் 5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த செய்ததிலிருந்தே பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்றது. சென்செக்ஸ் 50000 தாண்டி சென்று கொண்டிருந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் அதிகப்படியான லாபம் கிடைத்ததை அடுத்து அந்த லாபத்தை புக் செய்யும் விதமாக பலரும் பங்குகளை விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் இன்று பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்தது.
இன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 1939 புள்ளிகள் சரிந்து 49500 என்ற நிலையில் முடிவடைந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 568 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 14 ஆயிரத்து 529 என்ற புள்ளியில் முடிவடைந்தது. வங்கி மற்றும் நிதி துறை பங்குகள் தான் அதிக சரிவை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அரசு கடன் பத்திரங்கள் மீதான வட்டி உயர்வு, சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் தாக்கம் மற்றும் முதலீட்டாளர்கள் சகட்டுமேனிக்கு பங்குகளை விற்று தள்ளியது ஆகியவையே இந்த சரிவுக்கு காரணம் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




















